கொப்பிரைட்டிங் Copywriting - 
விளம்பர மாயாஜாலம்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி

பிராண்ட் ரெடி. அதை விளம்பரப்படுத்த தேவையான கருத்து உத்தியும் ரெடி. இனி விளம்பரத்தை உருவாக்குவதுதான் பாக்கி. கூப்பிடுவோம் “விஸ்வநாதன் ராம மூர்த்தியை” 

ஆம் ஒரு விளம்பரத்தை உருவாக்கத் தேவை இரட்டையர்கள். Copywriter மற்றும் Art Director. விளம்பரத்துக்கான மையக்கருவையும், கதையையும், வசனத்தையும் எழுதுபவர் Copywriter. வசனகர்த்தா என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கதையை அழகாக வடிவமைத்து, டிசைன் செய்பவர் Art Director. கலை இயக்குனர். அதாவது விஸ்வநாதனின் ட்யூன்களுக்கு இசை சேர்க்கும் ராமமூர்த்தியைப் போல. 

ஒரு விளம்பரத்தை உருவாக்குவதில் இவர்கள் இருவரின் பங்களிப்பே பிரதானம். இவர்கள் இருவரும் இணைந்து, பிணைந்து பணியாற்றியால்தான் சிறந்த விளம்பரங்களை உருவாக்க முடியும். அதற்காக வசனகர்த்தாதான் கதையை உருவாக்குபவர். கலை இயக்குனர்தான் டிசைன் செய்பவர் என்ற விதியெல்லாம் ஏதும் இல்லை. பல சமயங்களில் விளம்பரத்துக்கான கருவையோ, கதையையோ கலை இயக்குனர் கொடுக்கலாம். அதை வைத்துக்கொண்டு வசனகர்த்தா அந்தக் கதைக்கு மெருகூட்டலாம். அதேபோல் டிசைனுக்கான ஐடியாவை வசனகர்த்தா கொடுக்க அதை வைத்து கலை இயக்குனர் விளம்பரத்தை அழகூட்டலாம். இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது. வசனகர்த்தா, கலை இயக்குனர் இருவருமே இணைந்து தங்கள் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட வேண்டும் என்பதுதான். 

இந்த இரட்டையர்களில் வசனகர்த்தாவை முதலில் சந்திப்போம். இவரது பிரதான பணிகள் நான்கு, பத்திரிகை விளம்பரங்கள் எழுதுவது. ரேடியோ விளம்பரங்கள் எழுதுவது. டி.வி. விளம்பரங்கள் எழுதுவது. பிராண்ட் ஸ்லோகனை வடிவமைப்பது. விளம்பரங்கள் எல்லாமே ஒன்றுபோல் தோன்றினாலும், ஒவ்வொரு வகை விளம்பரத்துக்கும் தனித்தன்மைகள் உண்டு. அதற்கு உண்டான நெளிவு சுளிவுகளையம் வசனகர்த்தாவின் பணிகளையும் ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.

Comments